
லண்டன், ஜனவரி-17,வரும் ஞாயிறன்று காசா முனையில் அமுலுக்கு வரவுள்ள போர் நிறுத்த உடன்பாட்டை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்.
15 மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்த பாலஸ்தீன மக்களுக்கு இது மன நிம்மதியைக் கொடுக்குமென, லண்டனில் மலேசிய செய்தியாளர்களிடம் பேசிய போது பிரதமர் சொன்னார்.
மத்தியஸ்தம் செய்து உடன்பாட்டுக்கு வித்திட்ட எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் பங்களிப்பை இந்நேரத்தில் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.
அதே சமயம், இன்னும் ஓரிரு தினங்களில் புதிய அதிபராகவுள்ள டோனல்ட் டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடைவதில் ஆற்றிய பங்கையும் அன்வார் நினைவுகூர்ந்தார்.
இனி, காசாவின் நீடித்த அமைதிக்கும், போரில் உருக்குலைந்த அம்மண்ணின் மறுநிர்மாணிப்புக்குமான அடுத்தக் கட்ட முயற்சிகள் குறித்து அனைத்துலகச் சமூகம் சிந்திக்க வேண்டும்.
காசாவின் மறு நிர்மாணிப்பு முக்கிமென்றாலும், 46,700-க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களின் உயிர் போனதையும், 2 மில்லியன் மக்கள் இருப்பிடங்களை இழந்ததையும் எளிதில் மறக்க முடியாது என பிரதமர் சொன்னார்.
அவ்விஷயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதும் முக்கியமென, பிரிட்டனுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
அப்பாவி மக்களின் உயிரும் பொது சொத்துக்களும் சேதமடைவது தவிர்க்கப்பட வேண்டுமென்றார் அவர்.