
மலாக்கா, ஆகஸ்ட் 13 – நேற்று அதிகாலை மலாக்கா மாநில காவல்துறை தலைமையகத்தின் வணிக குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) மேற்கொண்ட Op Tiong என்ற சிறப்பு சோதனை நடவடிக்கையில் வெளிநாட்டு நபர்கள் தலைமையிலான ‘காதல் மோசடி’ கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இந்த சோதனை காவல்துறை கண்காணிப்பு மற்றும் உளவுத்துறைத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்று மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ துல்கைரி முக்தார் தெரிவித்தார்.
மேலும் இச்சோதனையில், 39 முதல் 47 வயதுடைய மூன்று நைஜீரிய ஆண்களும், ஓர் இந்தோனேசியப் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை குழுவினர் 15,000 ரிங்கிட் மதிப்பிலான இரண்டு மடிக்கணினிகள், எட்டு கைப்பேசிகள், ஆறு பாஸ்போர்ட்கள் மற்றும் ஒரு பேன் டிரைவையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த ஆறு மாதங்களாக அக்கும்பல் மாநிலத்தில் செயல்பட்டு வந்ததுடன், மாணவர் விசாக்களை தவறாக பயன்படுத்தி நாட்டில் நுழைந்து, சமூக ஊடகத்தில் பல்வேறு போலி பெயர்களில் மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
சந்தேகநபர்கள், போலி பேஸ்புக் சுயவிவரங்களை உருவாக்கி, தங்களை பாதிக்கப்பட்டவர்களின் காதலன் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் காதலனாக காட்டி, இனிமையான வார்த்தைகள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளால் பணத்தை இ-வாலட் கணக்குகளுக்கு மாற்றுமாறு ஏமாற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சைபர் மோசடிகளில் சிக்கி கொள்ளாமல், பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டுமென்று காவல்துறையினர் அறிவுறுத்தினர்.