
கோலாலம்பூர், ஜூலை-27 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்துக்கு ம.இ.கா வேண்டாத விருந்தாளியாக உள்ளது.
எந்தவொரு பங்களிப்பையும் செய்ய வாய்ப்புகள் வழங்கப்படாத இடத்தில் வேறென்ன செய்வது என, அதன் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒற்றுமை அரசாங்கம் அமைந்து 3 ஆண்டுகள் முடியப் போகிறது; ஆனால் இந்த 3 ஆண்டுகளில் அன்வாரை நம்பி ஏமாந்துபோனதே மிச்சம்.
பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்த எங்களை, அதனை மீட்டுக் கொள்ளச் சொல்லி தேசிய முன்னணி தலைமை உத்தரவிட்டது.
கூட்டணி தர்மத்தை மதித்து அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரித்தோம்; அமைச்சரவையில் ம.இ.காவுக்கு இடம் தருவதாகச் சொன்னார்கள்.
ஆனால் ஆரம்பத்திலேயே அந்த வாக்குறுதி காற்றில் பறந்தது; பின்னர் அன்வாரிடம் பேசிய போது கண்டிப்பாக எதையாவது செய்வதாகச் சொன்னார்.
ஆனால், அமைச்சரவை மட்டுமல்ல, பிற அரசாங்க நிறுவனங்களில் கூட எங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை.
இப்படி எந்த மட்டத்திலும் உரிய அங்கீகாரம் இன்றி ம.இ.கா நட்டாற்றில் விடப்பட்டுள்ளது.
70 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட அதுவும் முறையான உட்கட்டமைப்பைக் கொண்ட ஒரே இந்தியர் கட்சி ம.இ.கா.
ஆட்சி அதிகாரத்தில் பங்குகொண்டு மக்களுக்கும் சமூகத்துக்கும் சேவையாற்றிய அனுபவம் கொண்ட கட்சி இன்று உதாசீனப்படுத்தப்படுகிறது.
அமைச்சரவையில் பெயரளவுக்கு ஓர் இந்தியர் இருந்தால் போதுமா? அவர் உண்மையிலேயே இந்தியச் சமூகத்தைப் பிரதிநிதிப்பவராக இருக்க வேண்டும்.
அதே சமயம் தேசிய முன்னணி சார்பில் அமைச்சரவையில் இருப்பவர்களையும், இந்தியர்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை என கேட்க முடியாது.
மஸ்ஜித் இந்தியா ஆலயப் பிரச்னை, மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு, சம்ரி வினோத் விவகாரம் போன்றவற்றில் நமக்காக பேச யாரும் இல்லை.
இந்த நிலையில் தான் ம.இ.காவின் வெற்றிடம் எல்லோருக்கும் புரிகிறது.
துன் மகாதீர் பிரதமராக இருந்த காலத்தில் மலாய்க்காரர்களுக்கு அவர் அதிகம் செய்தாலும், இந்தியர்களை கைவிடவில்லை.
அவருக்கு இருந்த அசுர பலத்திற்கு, இந்தியர்களின் வாக்குகள் தேவையில்லை என்ற நிலையிலும் உதவி செய்வதை நிறுத்தவில்லை.
அதே நேரத்தில் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் காலத்தில், இந்தியர்களின் வாக்குகள் தேவைப்பட்டதை அறிந்து அவரும் சமூகத்துக்கு அள்ளிக் கொடுத்தார்.
ஆனால் இன்று கிள்ளிக் கொடுக்கக் கூட ஆளில்லை.
இப்படி மூன்றாண்டுகள் நம்பி மோசம் போனதே போதுமென வேதனையை வெளிப்படுத்திய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன், முடிவெடுக்க நேரம் நெருங்கி விட்டதை கோடி காட்டினார்.
இந்த அவமானங்களால் கட்சித் தொண்டர்கள் சோர்வுற்றுப் போயிருக்கின்றனர்; இந்நிலையில் ம.இ.காவின் எதிர்காலம் குறித்து தொண்டர்கள் எடுக்கும் முடிவுக்குக் கட்சி கட்டுப்படும்.
வேண்டாத விருந்தாளியாக தொடர்ந்து அவமானங்களைச் சந்திக்கும் இந்தியர்களின் அந்தத் தாய்க் கட்சியின் எதிர்காலம் விரைவிலேயே தெரியவருமென, உத்துசானுக்கு வழங்கியப் பேட்டியில் சரவணன் கூறினார்.