
கோலாலம்பூர், ஜனவரி-13, தேசியக் கால்பந்து மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் 30 மில்லியன் ரிங்கிட்டுக்கு உயர்த்துகிறது.
2025 வரவு செலவு அறிக்கையில் 15 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதல் நிதியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அது தனியார் துறையின் பங்களிப்பாக இருக்குமென்றார் அவர்.
கூடுதல் நிதி ஒதுக்கீடானது, தேசியக் கால்பந்து அணியை வலுப்படுத்தி, ஆசிய ஜாம்பவானாக உருமாற்றும் அரசாங்கத்தின் கடப்பாட்டை புலப்படுத்துவதாக பிரதமர் சொன்னார்.
அனைத்துலப் போட்டிகளுக்கு மலேசியாவைத் தயார் செய்யும் முயற்சியில், அனைத்து மட்ட கால்பந்து வளர்ச்சித் திட்டங்களுக்கு அந்நிதி பயன்படும்.
தனது கட்டமைப்பை மறுசீரமைக்க மலேசியக் கால்பந்து சங்கமான FAM-முக்கும் அது உதவியாக இருக்குமென டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
இவ்வேளையில், மலேசியக் கால்பந்து வளர்ச்சிக்கு ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டுவார் என்றும் பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கால்பந்து மேம்பாட்டில் TMJ-வின் பரந்த அனுபவமும், அடைவுநிலையும், அனைத்துலகத் தொடர்பும் தேசிய அணிக்கு விலைமதிப்பில்லா சொத்து என டத்தோ ஸ்ரீ அன்வார் வருணித்தார்.
JDT அணியின் மூலம் வெற்றிகளைக் குவித்தவரான துங்கு இஸ்மாயில், அண்மையக் காலமாக தேசிய அணிக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.