
கோலாலம்பூர், டிசம்பர் 26-கிறிஸ்மஸ் வரவேற்புக் கொண்டாட்டத்திற்குப் பிறகு கோலாலம்பூர் மாநகரம் குப்பைக்கூளமாக காட்சியளித்தது குறித்து, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக புக்கிட் பிந்தாங்கில் குப்பைகள் ஆங்காங்கே வீசப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதுவோர் அவமானகரச் செயல் என சாடிய அமைச்சர் ஙா கோர் மிங், பொது இடங்களின் தூய்மையில் பொது மக்களும் பொறுப்புடன் நடக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
தூய்மையான நகர சூழலை பராமரிப்பது அனைவரின் பொறுப்பாகும் என்றும், திறந்தவெளி இடங்களில் கழிவுகளை சரியான தொட்டிகளிலும் மறுசுழற்சி பையில் போட்டுச் செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், புக்கிட் பிந்தாங்கில் மக்கள் ஆங்காங்கே வீசிச் சென்ற குப்பைகளை துப்புரவுப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குப்பைகளை கண்ட கண்ட வீசுவது மாநகரின் நற்தோற்றத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் எனவும் நினைவுறுத்தப்பட்டுள்ளது.



