கோலாலம்பூர், டிசம்பர்-28, கிளந்தானில் F&B எனப்படும் உணவு மற்றும் பானங்களை விற்கும் தொழில் செய்வோர், தங்களின் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்றால் ஹலால் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டுமென்ற புதிய விதிமுறையை ஆதரிக்கவில்லை என பெர்சாத்து கட்சியின் மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களுக்கான பெர்செக்குத்து பிரிவின் துணைத் தலைவர் டத்தோ. ஸ்ரீ சஞ்சீவன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
வர்த்தக விரிவாக்கத்திற்கு குறிப்பாக முஸ்லீம் வாடிக்கையாளர்களையும் கவர்ந்திழுப்பதில் ஹலால் சான்றிதழ் பெரும் பங்கு வகிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் அது கட்டாயமாக்கப்படாமல், தன்னார்வ முறையில் மேற்கொள்ளப்படுவதே சிறந்ததாக இருக்குமென சஞ்சீவன் கூறினார்.
ஹலால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள வியாபாரிகளுக்கு உரிய ஏற்பாடுகள் செய்துத் தரப்பட வேண்டும்.
இதனிடையே, இதற்கான 3 பரிந்துரைகளையும் அவர் முன் வைத்துள்ளார்.
ஒருவேளை மாநில அரசுகள் ஹலால் சான்றிதழை விதிமுறையாக்கினால், அதற்கு விண்ணப்பிக்க வியாபாரிகளுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
அதை விடுத்து, முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் விதிமுறைகளை அமுல்படுத்தினால், உணவு தொழில்துறையினர் பாதிக்கப்படுவர்.
பலர் வியாபாரத்தை மூட வேண்டிய நிலைமை ஏற்படலாமென அவர் கவலைத் தெரிவித்தார்.
அதோடு, ஹலால் சான்றிதழக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் எளிதானதல்ல; அது குறித்து ஏராளமான வியாபாரிகள் குறிப்பாக சிறு மற்றும் குறு வியாபாரிகளும் முஸ்லீம் அல்லாதோரும் அதிக அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, மாநில அரசு ஒரு பணிக் குழுவை அமைத்து வியாபாரிகளுக்கு அதில் உதவ வேண்டும்.
இதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்தால், ஹலால் சான்றிதழ் விவகாரத்தை யாருக்கும் பாதிப்பில்லாமல் விவேகமான முறையில் கையாள முடியுமென ஸ்ரீ சஞ்சீவன் தெரிவித்தார்.
இதனிடையே, கிளந்தான் மாநில அரசாங்கம், அங்குள்ள உணவு மற்றும் பான விற்பனையாளர்கள் தங்களின் வியாபார உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்றால், ஹலால் சான்றிதழை வைத்திருக்க வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.
தற்போதைக்கு கோத்தா பாரு இஸ்லாமிய மாநகர நகராண்மைக் கழகத்தில் அது அமுலுக்கு வந்துள்ளது; பின்னர் மற்ற ஊராட்சி மன்றங்களுக்கும் அது விரிவுப்படுத்தப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.
அது குறித்து பேசியிருந்த வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், ஹலால் சான்றிதழைப் பெறுமாறு ஊராட்சி மன்றங்கள் உணவு மற்றும் பான விற்பனையாளர்களைக் கட்டாயப்படுத்தத் கூடாது என நினைவுறுத்தினார்.
உணவக நடத்துனர்கள் ஹலால் சான்றிதழக்கு விண்ணப்பிப்பதை அரசாங்கம் ஊக்குவிக்கிறதே தவிர ஒருபோதும் கட்டாயப்படுத்தாது என அமைச்சரவை முடிவு செய்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.