
கோத்தா பாரு, ஜூலை 28 – கிளந்தானில்,ஜூலை 17 முதல் 22 ஆம் தேதி வரை, போலீசார் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் கடன் வாங்கி திரும்பச் செலுத்த தவறிய மக்களிடம் பல அட்டூழியங்களைப் புரிந்து வந்த சட்டவிரோத வட்டி முதலைகள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சோதனைகளில் 25 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் உரிமம் பெறாத கடன் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றவியல் மிரட்டல் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மமட் கூறியுள்ளார்.
சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் சிவப்பு வண்ணப்பூச்சு தெளித்தல், அச்சுறுத்தும் குறிப்புகளை ஒட்டுதல், கற்களால் ஜன்னல்களை உடைத்தல், துன்புறுத்துதல், வீட்டு கதவுகளைப் பூட்டுதல் மற்றும் மிரட்டுதல் போன்ற குற்றவியல் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
நடவடிக்கைகளின் போது, சிவப்பு வண்ணப்பூச்சு, பேனாக்கள், அச்சுறுத்தல் குறிப்புகள், ஆடைகள், முகமூடிகள், கைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உடன்பட 32 பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஒன்பது குற்றச் சேத வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு பணக் கடன் வழங்குநர்கள் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது
இந்நிலையில் கடன் வாங்குபவர்கள் உரிமம் பெற்ற நிறுவனங்களுடன் மட்டுமே நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டுமென போலீஸ் தரப்பு அறிவுறுத்தியுள்ளது.