
ஜூனாகத், ஜூலை-12 – இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்னார் மலையில், தனது குடும்பத்தினருடன் மலை ஏறிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன், சிங்கத்தால் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை சுமார் 5:45 மணியளவில் அச்சிறுவன், தனது குடும்பத்துடன் சுமார் 5,000 படிகளைக் கொண்ட மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது, 50-ஆவது படிக்கு அருகே இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
சிறுவன் குடும்பத்தினருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தோன்றிய சிங்கம் அவனை அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்றது.
வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில், அந்த சிறுவனின் உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிங்கம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் காணப்பட்ட மற்ற இரண்டு சிங்கங்கள் என மொத்தம் 3 சிங்கங்கள் பிடிக்கப்பட்டு உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கிர்னார் மலைப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு, பொது மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



