Latestசினிமா

இசை உலகின் ஜாம்பவான் எஸ். ஜானகி 88வது வயதில் காலமானார்

மைசூர், ஜூலை-12 – தென்னிந்தியத் திரையுலகின் இசைக்குயில், பல தலைமுறைகளின் நினைவுகளில் நீங்காத இடம்பிடித்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மரணமடைந்தச் செய்தி, ஒட்டுமொத்த இசை உலகையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

88 வயதான அவர், முதுமை காரணமாக கர்நாடக மாநிலம் மைசூரில் நேற்று காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, ஒரு காலகட்டத்தின் உணர்வுகளோடு ஒன்றியவர் ‘ஜானகி அம்மா’ என பாசத்தோடு அழைக்கப்படும் ஜானகி.

1957-ஆம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ திரைப்படத்தில் தொடங்கிய இவரது இசைப் பயணம், சுமார் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது.

இவரது குரலின் இனிமைக்குச் சான்றாக 4 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

’16 வயதினிலே’ படத்தின் “செந்தூரப்பூவே”, ‘தேவர் மகன்’ படத்தின் “இஞ்சி இடுப்பழகி” போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் பல தலைமுறை இரசிகர்களின் இதயங்களை வென்றவர்.

கலைமாமணி விருது உள்ளிட்ட பல மாநில அரசு விருதுகளைத் தட்டிச் சென்ற இவர், 2013-ல் பத்ம பூஷண் விருதை, அது தனது இசைப் பயணத்திற்குத் தாமதமாக வழங்கப்பட்டதாகக் கூறி மறுத்தது, அவருடைய தனித்துவமான தன்மையையும் சுயமரியாதையையும் பறைசாற்றியது.

ஆந்திராவின் குண்டூரில் பிறந்த இவர், தனது அசாத்தியமான குரல் வளம் மற்றும் பன்மொழித் திறமையால் இந்திய இசை வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என வருணித்தார்.

அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் இரசிகர்களின் மனங்களில் அவர் என்றென்றும் நிலைத்திருப்பார் என்றும் விஜய் தெரிவித்தார்.

இவ்வேளையில் திரையுலக ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்” என ரஜினிகாந்த் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்” என கமல்ஹாசன் தனது பாணியில் அனுதாபம் தெரிவித்தார்.

பக்திப் பாடல்கள் முதல் காதல் பாடல்கள் வரை அனைத்திலும் தன் முத்திரையைப் பதித்த ஜானகி அம்மா, இப்போது நம்மிடையே இல்லை என்றாலும், அவர் விட்டுச் சென்ற பல்லாயிரக்கணக்கான பாடல்கள் மூலம் அவர் என்றென்றும் நம்முடன் வாழ்வார்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!