
கோலாலம்பூர், ஜனவரி-19, பழையக் குப்பை லாரியொன்று, தளும்ப தளும்ப குப்பைப் பைகளை ஏற்றிச் செல்லும் வீடியோ டிக் டோக்கில் வைரலாகி, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
MyViewcaptured என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றப்பட்ட அக்காட்சிகள், புத்ராஜெயா மற்றும் ஷா ஆலம் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பதிவுச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
குப்பை லாரியின் உயரத்திற்கு சுமார் ஐந்து அடுக்குகளில் குப்பைப் பைகளைக் கட்டி வைத்துள்ளனர்.
அதுவோ ஒரு பழைய லாரி; பதிவு எண் பட்டை கூட இல்லை;
இந்நிலையில் இத்தனை உயரத்திற்கு குப்பைப் பைகளை கட்டி எடுத்துச் செல்லும் போது, ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களும் பாதிக்கப்பட மாட்டார்களா என, வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.
அது குப்பை லாரி போல் தெரியவில்லை; கூடுதல் வருமானத்திற்காக பழைய சாமான்களை விற்பதற்காக ஏற்றிச் செல்வது போல் உள்ளது என சிலர் சந்தேகம் எழுப்பினர்.
இதுபோன்று அதிக பாரமேற்றிச் செல்லும் லாரிகள் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிப்பது வாடிக்கையாகி விட்டது; குறிப்பாக LDP நெடுஞ்சாலையில் அனுதினமும் அக்காட்சிகளைத் தாம் நேரில் காண்பதாக ஒரு பயனர் குறைப்பட்டுக் கொண்டார்.
இதனாலேயே, லாரிகளைக் கண்டாலே தாம் ஒதுங்கி விடுவதாக மோட்டார் சைக்கிளோட்டியான அவர் சொன்னார்.
அமுலாக்க அதிகாரிகள் உண்மையில் என்னதான் செய்துகொண்டிருக்கிறீர்கள்? எப்படி இவற்றை அனுமதிக்கலாமென பலர் கேள்வியெழுப்பினர்.