Latestமலேசியா

குழந்தை சித்ரவதை கர்ப்பிணிப் பெண் உட்பட இருவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஏப் 10- தங்கள் பராமரிப்பில் இருந்த மூன்று வயது குழந்தையை துன்புறுத்தி, அதன் தொடைகள் மற்றும் பிறப்புறுப்புப் பகுதியில் காயங்களை ஏற்படுத்தியதாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணான 28 வயதுடைய A. சரண்யாவும் , அவரது தாயாரான 63 வயதுடைய R. சரோஜாவும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ்  சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தனர்.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 20,000-ரிங்கிற்கு மேற்போகாத அபராதம், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், செராஸில் ஜாலான் புடு இம்பியான் சாலையில் அமைந்துள்ள ஒரு வீட்டில் சரண்யாவும் ,சரோஜாவும் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

அவர்கள் இருவருக்கும் தலா 15,000 ரிங்கிட் ஜாமின் அனுமதித்த நீதிபதி மசுலியானா அப்துல் ரஷிட் , மாதந்தோறும் அருகேயுள்ள போலீஸ் நிலையத்திற்கு ஆஜாராக வேண்டும் என்பதோடு அரசு தரப்பு சாட்சிகளை அல்லது பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை மே மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!