
சிரம்பான், செப்டம்பர் 12 – தன் இரு மகன்களை இழந்த தந்தை, அவர்களின் கல்லறைகளுக்கு கூடச் சென்று பார்க்க முடியவில்லை என நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க ஜாமீன் கோரியுள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், போர்ட் டிக்சன் அருகே சுங்கை லிங்கி நதிக்குள் அவர்களின் கார் வழுக்கிச் சென்று மூழ்கியதில் ஆறு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அவர்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் உடல் ரீதியான காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான, குழந்தைகளின் தந்தை ஜாமினுக்காக விண்ணப்பிக்கும்போது, தனது குழந்தைகள் இறந்ததிலிருந்து, அவர்களின் கல்லறைகளுக்குக் கூட போக முடியவில்லை என்று நீதிபதியின் முன் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
இருந்தபோதும் நீதிபதி ஜாமின் வழங்குவதை மறுத்து, வழக்கை நவம்பர் 10ஆம் தேதிக்குத் தள்ளி வைத்ததைத் தொடர்ந்து அதே நாளில் ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.