
கோலாலம்பூர், பிப்ரவரி 5 – ‘கேப்டன் பிரபா’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக ஆடவன், ‘Op Jack Sparrow’ நடவடிக்கையின் கீழ், தாய்லாந்து அதிகாரிகளின் நெருங்கிய ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டு, நேற்று மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டான்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம். குமார், பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்த நபர், 2025 ஜனவரி 14 ஆம் தேதி அன்று நீதிமன்றம் வெளியிட்ட பிடி ‘வாரண்ட்’ அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி இன்று நீதிமன்றத்தில், குற்றச் சட்ட பிரிவிற்கு கீழ், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினராக செயல்பட்ட குற்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளான். பிற வழக்குகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விரைவில் தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவன் சுபாங் ஜெயாவில் நிகழ்ந்த கடுமையான தாக்குதல் வழக்கு மற்றும் ஆயுதம் ஏந்திய கலவரத்தில் ஈடுபட்ட வழக்கு ஆகியவற்றிலும் தொடர்புடையவன் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கு முன், இதே கும்பலைச் சேர்ந்த ஒருவன் தாய்லாந்திலிருந்தும், மேலும் இந்தியாவின் மும்பையிலிருந்து மூன்று பேர் மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இவை அனைத்தும் Op Jack Sparrow நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வழங்கிய ஒத்துழைப்புக்காக தாய்லாந்து அதிகாரிகளுக்கு PDRM தனது பாராட்டை தெரிவித்துள்ளது.



