Latestமலேசியா

கேளிக்கை விடுதிகளில் DBKL அதிரடிச் சோதனை: 8 அபராத அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன

கோலாலம்பூர், ஆகஸ்ட்-24-கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL, தலைநகர் முழுவதும் உரிமம் இன்றி இயங்கி வரும் பொழுதுபோக்கு மையங்கள் மீதான அமலாக்க நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அவ்வகையில் நேற்று வெளிநாட்டினரால் நிர்வகிக்கப்படும் மற்றும் உணவு நிறுவனங்களுக்கான உரிம விதிமுறைகளைப் பின்பற்றாத வளாகங்களில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கெப்போங், செபுத்தே, புக்கிட் பிந்தாங் ஆகிய பகுதிகளில் அச்சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டது. அதில் 1974-ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டம், 2016-ஆம் ஆண்டு வர்த்தகம், தொழில் மற்றும் தொழில்துறை உரிமம் தொடர்பான துணைச் சட்டங்கள், 2016-ஆம் ஆண்டு உணவு நிறுவன உரிமம் தொடர்பான துணைச் சட்டங்கள் ஆகியவற்றின் கீழ் எட்டு அபராத அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.

அனுமதியின்றி பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வளாகங்களுக்கு விதிமீறல் தொடர்பான மூன்று எச்சரிக்கை அறிவிக்கைகளும் வழங்கப்பட்டன. அதோடு பொழுதுபோக்கு தொடர்பான பொருட்கள் கைப்பற்றப்பட்டு ஒரு வளாகமும் உடனடியாக மூடப்பட்டது.

பொதுமக்களின் நலனையும் ஒழுங்கையும் பேணும் வகையில், கோலாலம்பூரில் உள்ள வணிக மற்றும் பொழுதுபோக்கு வளாகங்களில் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என DBKL தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் https://adukl.dbkl.gov.my/ என்ற இணைய இணைப்பின் மூலம் தங்கள் புகார்கள் அல்லது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் அது கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!