
புத்ராஜெயா, நவம்பர்-21 – அரசாங்கத் துணைத் தலைமை வழக்கறிஞர் கேவின் மொராய்ஸ் படுகொலையில் மரணத் தண்டனைக்கு உள்ளான முன்னாள் இராணுவ மருத்துவர் ஆர்.குணசேகரன், தனது தண்டனையை மறுபரிசீலனை செய்ய கூட்டரசு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்தக் கொலையை நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உட்படுத்த அவர் கோருகிறார்.
1995-ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்ற விதிகளின் 37-ஆவது பிரிவின் கீழ் அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த விதி, கடுமையான அநீதியை சந்தித்ததாகக் கருதும் தரப்புகள், கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்கிறது.
அவ்வகையில், மேல்முறையீட்டில் தனது தரப்பு வாதங்கள் சரியாக பரிசீலிக்கப்படவில்லை என குணசேகரன் கூறுகிறார்.
அப்போதையத் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான 3 நீதிபதிகளைக் கொண்ட குழு, தனது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த வாதங்களை முறையாக பரிசீலிக்கத் தவறி விட்டதாக, தற்போது சுங்கை பூலோ சிறையிலிலிருக்கும் குணசேகரன் தாக்கல் செய்த afidavit மனுவில் கூறப்பட்டுள்ளது.
“இதனால், இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது; மற்ற இரு குற்றவாளிகளுடன் ஒப்பிடும் போது தண்டனையிலும் வேறுபாடு உள்ளது; இது நீதிக்குப் புறம்பான தவறானச் செயலாகும்” என்றும் குணசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமா இல்லையா என்பதை கூட்டரசு நீதிமன்றம் விரைவில் தீர்மானிக்க உள்ளது.
கேவின் மொராய்ஸ் கொலையில் முக்கியக் குற்றவாளியான குணசேகரனுக்கு உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, கடந்த ஜூலையில் கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியது.
எனினும், S நிமலன், S ரவிசந்திரன் ஆகிய மற்ற இரு குற்றவாளிகளுக்கும் முறையே 35 மற்றும் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது.



