
கோத்தா திங்கி, டிசம்பர் 31 – ஜோகூர் கோத்தா திங்கி Bandar Penawar-லுள்ள Jalan Industri A5, பகுதியில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு தொழிற்சாலையின் முன்பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் மீது மண் சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இந்தோனேசிய ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பணியாற்றிய மற்றொரு தொழிலாளர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டு பாதுகாப்பாக வெளியேறினார்.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே Bandar Penawar தீயணைப்பு துறையினர் அடுத்த 5 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்தை அடைந்து மீட்பு பணி வேலைகளில் உடனடியாக ஈடுபட்டனர் என்று, தீயணைப்பு துறையின் மூத்த செயல்பாட்டு தளபதி Mohd Khairul Sufian Dahari தெரிவித்தார்.
தற்போது இச்சம்பவம் தொடர்பான மேல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



