கோத்தா பாருவில் வழிப்பறி கொள்ளை; வயோதிக மாது காயம்; மூவர் கைது

கோத்தா பாரு, நவம்பர் 4 –
கடந்த சனிக்கிழமை, கோத்தா பாரு, நீலாம் பூரி பகுதியில், வயோதிக பெண்ணிடம் வழிப்பறி கொள்ளையடித்த மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
69 வயது மதிக்கத்தக்க அப்பெண் சாலையைக் கடக்க முயன்றபோது, ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் அவரை அணுகினர். அதில் ஒருவன் இறங்கி வந்து, அப்பெண்ணின் கையில் இருந்த பணப்பையைப் பலவந்தமாக பறித்துச் சென்றான் என்று கோத்தா பாரு துணை மாவட்ட போலீஸ் தலைவர் வான் ரூசைலான் வான் மாட் ருசொஃப் (Superintenden Wan Ruzailan Wan Mat Rusoff) தெரிவித்தார்.
அம்மாது அப்பையை மீட்க முயன்றபோது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்ததைத் தொடர்ந்து, அத்திருடர்கள் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் 20 முதல் 30 வயதிற்குட்டபட்டவர்கள் என்று அறியப்படுகின்றது.சம்பவத்தின்போது அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த மூன்று பெரும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து இன்று முதல் திங்கட்கிழமை வரை ஏழு நாட்கள் போலீஸ் தடுப்பு காவலில் அவர்களை வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



