
கோலாலம்பூர், செப்டம்பர் -22,
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 2-ல் வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் 60 ரிங்கிட்டுக்கு பதிலாக 800 ரிங்கிட்டை வசூலித்த போலி டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய வாகனத்தையும் சாலைவழி போக்குவரத்து துறை (RTD) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பயணி முதலில் 60 ரிங்கிட் எனக் கூறப்பட்ட கட்டணத்தை ஏற்றுக்கொண்ட பிறகும் பயணத்தின் இறுதியில், 800 ரிங்கிட்டைச் செலுத்திய பிறகே வாகனத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார் என்று போக்குவரத்து அமைச்சர் ஆந்தனி லோக், சமூக ஊடகங்களில் வைரலான இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் உத்தரவின் பேரில், RTD அதிகாரிகள் ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு நேற்று KLIA-வில் குறித்த வாகனத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து ஓட்டுநரையும் உடனடியாகக் கைது செய்தனர்.
இந்நிலையில் விரைவான நடவடிக்கையால் நல்ல முன்மாதிரியாக செயல்பட்ட RTD அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றியையும் அமைச்சர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துக் கொண்டார்