
கோலாலம்பூர், மார்ச்-12 – சபா அரசியல்வாதிகளை உட்படுத்திய ஊழல் புகார் தொடர்பான வீடியோ ஆதாரம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Lawyers for Liberty அமைப்பின் நிர்வாக இயக்குநர் சாய்ட் மாலேக் (Zaid Malek) புத்ராஜெயா MACC தலைமையத்தில் நேற்று பிற்பகலில் அதனை ஒப்படைத்ததாக, அவ்வமைப்பின் இணை நிறுவனரான லத்தீஃபா கோயா ( Latheefa Koya) கூறினார்.
சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரம் எடிட் செய்யப்படாத அசல் வீடியோவாகும்; இதற்கு முன், அவ்விவகாரம் வெடித்த போது, வைரலான வீடியோ எடிட் செய்யப்பட்டதென காரணம் கூறப்பட்டதால், இம்முறை அசல் வீடியோவை சமர்ப்பித்துள்ளோம்.
எனவே, இனியும் சாக்குபோக்கு கூறாமல் விசாரணையைத் தொடங்க வேண்டுமென லத்தீஃபா கேட்டுக் கொண்டார்.
அதே சமயம், தகவல் கொடுத்த நபர் பாதுகாக்கப்பட வேண்டும்; அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது.
மாறாக, அவரின் வாக்குமூலங்களைப் பெற்று விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும்.
தவறு செய்த ‘பெரிய மீன்களை’ விட்டு விட்டு, தகவல் கொடுத்த சிறிய மீன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை மக்களே விரும்ப மாட்டார்கள் என லத்தீஃப்பா சுட்டிக் காட்டினார்.
சபா முதல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நூர், 8 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற சபாநாயகரை உட்படுத்திய ஊழல் பேரத்தை அவ்வீடியோ பதிவுச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.