
கோலாலம்பூர், மார்ச்-14 – சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத், சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி இருவர் மீதும் கிரிமினல் வழக்கைப் பதிவுச் செய்ய போலீஸுக்குத் ஆணைக் கிடைத்துள்ளது.
ஆனால், அது தெரிந்தே இருவரும் தாய்லாந்துக்குத் தப்பியோடி விட்டதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ காலிட் இஸ்மாயில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து இருவரையும் கண்டுபிடிக்க தாய்லாந்து போலீஸுடன் ஒத்துழைத்து வருவதாக அவர் சொன்னார்.
“வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டு தாயகம் கொண்டு வரப்பட்ட கையோடு அவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்” என நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் IGP சொன்னார்.
பிப்ரவரி 7-ஆம் தேதி கோலாலம்பூர் SOGO பேரங்காடிக்கு வெளியே பொது அமைதியைக் கெடுக்கும் வண்ணம் பேசியதாக சம்ரியும், லங்காவியில் திரிசூலத்தை காலால் மிதித்ததாக தமிமும் குற்றச்சாட்டை எதிர்நோக்கவுள்ளனர்.
இந்தியச் சமூகத்தை இழிவுப்படுத்தியதன் பேரில் பினாங்கில் சம்ரி மீது தனியாக இன்னொரு குற்றச்சாட்டும் கொண்டு வரப்படுகிறது.
பொது அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும் எந்த தனிநபரையோ கும்பலையோ போலீஸ் அனுசரித்து செல்லாது என்றும் IGP திட்டவட்டமாகக் கூறினார்.



