
செந்தோசா, மார்ச்-7 – சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்துடனான பொது விவாதத்தில், டத்தோ ஸ்ரீ எம். சரவணன் பக்கம் தாம் உறுதியாக நிற்பதாக, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் கூறியுள்ளார்.
இந்துக்களின் சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளை இழிவுப்படுத்தும் அறிக்கைகளுக்கு நிச்சயம் பதிலடி தேவை.
‘வேல் வேல்’ முழக்கத்துடன் கூடிய காவடியாட்டத்தை பேயாட்டம் என்றும் மதுபோதை ஆட்டம் என்றும் உளறுவதெல்லாம் அடிப்படையற்ற அவதூறுகள்.
இந்துக் கலாச்சாரமும் நம்பிக்கையும் புரியாதவர்களின் பிதற்றல் அது.
எனவே, இந்த குழப்பவாதிகளுக்கு நல்ல பாடம் புகட்டுவதும், எழுந்துள்ள தவறான கருத்துக்களைத் தெளிவுப்படுத்தி அறிவுசார் கலந்தாய்வாக இந்த பொது விவாதம் அமைவதும் முக்கியம்.
இது வெறும் மேடைச் சவால் அல்ல; மாறாக தவறாகப் புரிந்துகொண்டவர்களுக்குக் கற்பிப்பதற்கும் அறிவூட்டுவதற்கும் ஒரு நல் வாய்ப்பாகும்.
எனவே, நம் சமூகத்தின் கண்ணியத்தையும் உண்மையையும் பாதுகாப்பதில் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான சரவணனுக்கு முழு ஆதரவை வழங்குவதாக, குணராஜ் அறிக்கையில் கூறியுள்ளார்.
சரவணன் விடுத்த பொது விவாத அழைப்பை சம்ரி வினோத் ஏற்றுக் கொண்டதை அடுத்து, மார்ச் 23-ஆம் தேதியை அதற்கான நாளான சரவணன் நிர்ணயித்துள்ளார்.