
கோலாலம்பூர், பிப் 18 – கோத்தா கினபாலுவிற்கு குறைந்தது 1,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி போர்ட் கிள்ளானில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அக்கார்களை திரும்பப் பெற அதன் உரிமையாளர்கள் 60 விழுக்காடு கட்டணத் திருப்ப செலுத்த வேண்டும் என கூறுவது ஏற்புடையதாக இல்லையென வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போர்னியோவுக்கு செல்லும்வழியில் பத்து பஹாட் (Batu Pahat) , Tanjung Labuhவில் 9.1 கடல் மைலுக்கு அப்பால் அந்த கப்பல் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அது மீண்டும் போர்ட் கிள்ளானுக்கு திரும்பியது.
அந்த கப்பலில் இருந்த வாகனங்களில் சில தீயினால் சேதம் அடைந்ததை Tik Tok காணொளியில் பார்க்க முடிந்ததோடு அந்த வாகனங்களின் உரிமையாளர் அவற்றை திரும்பப்பெற 60 விழுக்காடு கட்டணத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த தீச்சம்பவம் ஏற்பட்டு மூன்று மாதங்களாகிவிட்ட போதிலும் தீக்காண காரணம் குறித்து எதுவும் தெரியவில்லையென வாகன உரிமையாளரான பிர்டவுஸ் யுஷா ( Firdaus Yusza ) கூறியதாக FMT தெரிவித்துள்ளது.
கடலில் தீ அல்லது சேதம் ஏற்பட்டால், கப்பல் உரிமையாளருக்கும் சரக்கு உரிமையாளர்களுக்கும் இடையில் இழப்பை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற பொதுவான விதியின் காரணமாக கார்கள் வைக்கப்பட்டுள்ளன என்று தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தனியார் உரிமையாளர்கள் குறிப்பாக, கார்கள் சேதமடையாதவர்கள் கூட, வாகனத்தின் மதிப்பில் 60 விழுக்காடு தொகையை சரக்கு கப்பல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என்பது பெரும் சுமையாக இருப்பதாக தனது காரை முதல் முறையாக தாவாவிற்கு (Tawau) அனுப்பிய பிரடவுஸ் கூறினார்.
கப்பல் சேவைக்காக 2,700 ரிங்கிட்டை செலுத்திய பின்னரும் காப்புறுதியை வாங்கத் தவறியதற்காக குற்றஞ்சாட்டப்படுவது குறித்து தனது விரக்தியை அவர் வெளிப்படுத்தினார்.