
கோலாலம்பூர், மார்ச்-7 – தைரியமிருந்தால் தம்முடன் பொது விவாதத்திற்கு வருமாறு ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் விடுத்த அழைப்பை, சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் ஏற்றுக் கொண்டுள்ளார்.
என்ன தலைப்பு, எங்கு விவாதம், யார் ஏற்பாடு என்பதை முடிவு செய்யுங்கள் என தனது facebook பக்கத்தில் சம்ரி கூறியுள்ளார்.
அதனை வரவேற்ற தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணன், மலேசியத் தமிழ் மொழி மன்றத்தின் ஏற்பாட்டில் மார்ச் 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு பொது விவாதம் நடைபெறும் என்றார்.
கோலாலம்பூரில் ஓரிடத்தை நீங்களே முடிவு செய்யுங்கள்; அங்கு நான் வருகிறேன் என தனது facebook பதிவில் சரவணன் குறிப்பிட்டார்.
தலைப்பு ஒன்றும் பெரியத் தலைப்பல்ல; காவடி ஏந்தும் இந்துக்கள் ‘ வேல் வேல்’ என முழக்கமிடுவது பேயாட்டாம் என்றும் மதுபோதையில் ஆடும் ஆட்டம் என்றும் தான்தோன்றித்தனமாக நீங்கள் கூறிக் கொண்ட அதே விஷயம் தான்;
அதில் உங்களுக்கு அடிப்படை எதுவும் தெரியாமலிருக்கலாம்; அதையே விவாதத் தலைப்பாக வைத்துக் கொள்வோம்.
இனி முடிவு உங்கள் கையில் என தனது facebook பதிவை சரவணன் முடித்துள்ளார்.
இருவருக்குமிடையிலான இந்த பொது விவாதம் உறுதியானால், உள்ளூர் அரங்கில் இரு வேறு சமயங்களைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் பங்கேற்கும் பரபரப்பான விவாதமாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்துக்களை ஏற்கனவே பல முறை இழிவுப்படுத்தியவர் தான் இந்த சம்ரி வினோத்.
இந்நிலையில், தனியார் மலாய் வானொலியான ஏரா எஃ.எம்மின் அறிவிப்பாளர்கள் ‘வேல் வேல்’ முழக்கத்தை சிறுமைப்படுத்தும் வகையில் நடனமாடி சிரிக்கும் வீடியோ தொடர்பில், அழையா விருந்தினராக வந்து தேவையில்லாததை எல்லாம் பேசி தற்போது தானே சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார்.