
சாரா உதவித் திட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் சேர்ப்பு; 10,000 கடைகள் பங்கேற்பு
புத்ரா ஜெயா, பிப்ரவரி-9
இன்று தொடங்கும் அனைவருக்குமான Sumbangan Rahmah அடிப்படைத் திட்டமான ( SARA ) வில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கிறார். 22 மில்லியன் மலேசியர்களின் மை கார்டுகளுக்கு 100 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை வாங்கும் திட்டத்தின் அண்மைய கட்டத்தில் சில்லறை விற்பனைத் துறையிலிருந்து அதிகரித்த பங்கேற்பும் இடம்பெறும் என்று அவர் கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் 10,000 சில்லறை விற்பனையாளர்கள் இந்த முயற்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் அணுகல் திறன், பங்கேற்கும் சாரா விற்பனை நிலையங்களுக்கான அதிகபட்ச தூரத்தை தற்போதுள்ள 10 கிலோமீட்டரில் இருந்து 7 கிலோமீட்டருக்குள் குறைப்பதன் மூலம் மேம்படுத்தப்படும் என இன்று காலை பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை அமைச்சரின் மாதாந்திர ஊழியர் கூட்டத்தில் பேசியபோது அன்வார் தெரிவித்தார். சாரா உதவி அரசாங்கத்தின் நிதி சீர்திருத்தங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற சேமிப்பு மூலம் நிதியளிக்கப்படுகிறது. மேலும் இந்த சேமிப்புகளை அனைத்து மலேசியர்களின் நலனுக்காகவும் மறுபகிர்வு செய்யலாம் என்று அவர் கூறினார்.



