சிங்கப்பூர், செப்டம்பர்-5, சிங்கப்பூரின் செந்தோசா பலவான் ( Sentosa Palawan) தீவில் கடற்கரையோரமாக பெரிய சுறா மீன் நீந்தி விளையாடியது கண்டு, பொது மக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்கில் ‘blacktip reef’ வகை அச்சுறா நீந்தியதை மக்கள் கூட்டமாக நின்றுகொண்டு வீடியோ எடுப்பது வைரலாகியுள்ளது.
இதற்கு முன் சிறிய அளவிலான சுறா மீன்கள் தான் காணப்பட்டன; சுமார் 40 செண்டி மீட்டர் நீளத்தில் அவற்றை கண்டுள்ளோம்.
சிறியதாக இருந்ததால் நாங்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால், இந்த சுறாவோ சுமார் 1.5 மீட்டர் நீளத்தில் இருந்ததால் பலர் அச்சமடைந்தனர்.
உதவிக் கேட்டு கூச்சலிட்டதோடு கடலில் நீந்திக் கொண்டிருந்தவர்களும் உடனடியாக கரைக்கு ஓடி வந்தனர்.
இடம் கலவரமானதால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீச்சலும் நீர் சார்ந்த மற்ற நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டுமென்பதைக் குறிக்கும் கொடிகளும் ஏற்றப்பட்டன.
சுறா மீன்கள் அப்பகுதியில் காணப்படுவது மிகவும் அரிதென்ற நிலையில், செந்தோசா கடற்கரையில் பாதுகாப்பு நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.