Latestமலேசியா

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – மலேசியா ஏர்லைன்ஸ் இடையிலான உத்தேச வணிக ஒத்துழைப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய சிங்கப்பூர் போட்டித்தன்மை ஆணையம்

சிங்கப்பூர், ஜூலை-8 – சிங்கப்பூர் போட்டித்தன்மை மற்றும் பயனீட்டாளர் ஆணையமான CCCS, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் (SIA) மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் (Malaysia Airlines Bhd) இடையிலான பரிந்துரைக்கப்பட்ட வணிக ஒத்துழைப்புக்கு, சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த உத்தேச ஒத்துழைப்பின் கீழ், இரு விமான நிறுவனங்களும் விமான அட்டவணை அமைப்பு, கட்டண நிர்ணயம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட வணிக துறைகளில் இணைந்து செயல்படவுள்ளன.

இதனுடன் விரிவான codesharing ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு விகித ஒப்பந்தங்களும் அடங்கும்.

சிங்கப்பூர் – கோலாலம்பூர் இடையிலான விமான பாதையில் கட்டண மற்றும் கொள்ளளவு ஒருங்கிணைப்புகள் போட்டியைத் தடுக்குமோ என்ற CCCS-சின் கவலைகளை தீர்க்க, இரண்டு விமான நிறுவனங்களும் சில உறுதிமொழிகளை சமர்ப்பித்திருந்தன.

இந்த உறுதிமொழிகளில், தற்போதைய வாராந்திர இருக்கை கொள்ளளவை நிலைநிறுத்தவும், சில செயல்திறன் அடைவுநிலைகளுக்குப் பிறகு கொள்ளளவை அதிகரிக்கலாம் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அதோடு மலிவுக் கட்டண விமான சேவைகள் தொடர்பான வருடாந்திர செயல்பாடுகளின் தரவுகளை சமர்ப்பித்தல், மற்றும் இந்த உறுதிமொழிகளின் பாதுகாப்பு நடைமுறைகளை கண்காணிக்க ஒரு சுயேட்சை தணிக்கைக் குழுவை நியமித்தல் ஆகியவற்றுக்கும் இணக்கம் காணப்பட்டது.

சந்தை முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, குறிப்பாக Jetstar Asia Airways Pte Ltd நிறுவனத்தின் சேவை நிரந்தரமாக முடிவுக்கு வரவிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஒத்துழைப்பால் ஏற்படக்கூடிய போட்டி குறைபாடுகளை தீர்க்க, பரிந்துரைக்கப்பட்ட உறுதிமொழிகள் போதுமானவை என CCCS ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், இத்தகைய கூட்டுச் செயல்திட்டங்கள் தொடர்பை மேம்படுத்தி, பயணிகளுக்கு மேலும் அதிக தேர்வுகளை வழங்கும் என CCCS தலைமை நிர்வாக அதிகாரி Alvin Koh கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!