
ஜோகூர் பாரு, ஜனவரி-3 – ஒரு வயதான ஆடவர், தனது காரின் எண் பட்டையை ‘sellotape’ கொண்டு மறைத்து, மானிய விலையிலான RON95 பெட்ரோலை நிரப்பும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அப்போது, பின்னாலிருந்த மற்றொரு பயனர் நீங்கள் மலேசியரா என அவரிடம் கேள்வி எழுப்புகிறார்.
அந்த வயதானவர் தன்னை மலேசியர் எனக் கூறினாலும் அந்த பயனர் திருப்தியடையாமல் மீண்டும் கேட்டபோது, அந்த ஆணின் மனைவி என நம்பப்படும் மாது காரிலிருந்து வெளியே வந்து, “நாங்கள் மலேசியர்கள், எங்களிடம் மலேசிய IC உள்ளது” என்று வலியுறுத்தினார்.
ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த வாகனங்களை குறிக்கும் “S” எழுத்து, அந்த வெள்ளை நிறக் காரின் எண் பட்டையில் ‘sellotape’-பால் மூடப்பட்டிருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
வாக்குவாதமாக மாறுவதற்குள் அக்கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டது.
இச்சம்பவம் எங்கு நடந்தது என்ற தகவல் இல்லை.
இருந்தாலும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான வலைத்தளவாசிகள், அந்த மூத்த தம்பதியரின் செயலை கடுமையாக விமர்சித்து, மானியம் பெற்ற எரிபொருளை பயன்படுத்துவதற்காக எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர் என குற்றம் சாட்டினர்.



