
சிரம்பான், செப் -20,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சிரம்பானுக்கு அருகே 276.5 ஆவது கிலோமீட்டரில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்ததால், கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் நீளத்திற்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரவு மணி 9.50 மணியளவில் நடந்த இந்த சம்பவம் போக்குவரத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
வாகனங்கள் மெதுவாகச் சென்றதால், நெடுஞ்சாலையில் ஒரு வெள்ளை கார் தீப்பிடித்து எரிவதை முகநூலில் பகிரப்பட்ட காணொளியில் காணமுடிந்தது.
Bandar Baru Nilai முதல் Bandar Baru Ainsdale வரையிலான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.
தீயணைப்பு பணிகளை அனுமதிக்க அவசர மற்றும் இடது பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
ஒரு தீயணைப்பு வண்டி , நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைவாக அனுப்பப்பட்டு தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதோடு, தீ விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
வாகன ஓட்டிகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர். வைரலான இந்த வீடியோவில் சமூக ஊடக பயனர்கள் தங்களது அதிர்ச்சியையும் நிம்மதியையும் வெளிப்படுத்தினர்.