சிறார் பாலியல் குற்றவாளிக்கு எதிரான விசாரணைகளில் அதிர்ச்சியூட்டும் துஷ்பிரயோகம் மற்றும் அருவருப்பான வீடியோக்கள் அம்பலம்

ஜோகூர் பாரு, செப்டம்பர்-14,
சிறார் பாலியல் புகாரில் ஜோகூர் பாருவில் கைதான 29 வயது நபர், குறைந்தது 15 குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
அருவருப்பான ஆயிரக்கணக்கான ஆபாசப் புகைப்படங்களும், டசன் கணக்கான வீடியோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவத்தின் கொடுமைத் தன்மையால் விசாரணை அதிகாரிகள் கூட மன உளைச்சலுக்கு ஆளானதாக நம்பத்தகுந்த போலீஸ் வட்டாரங்கள் NST-யிடம் தெரிவித்துள்ளன.
சந்தேக நபர், திருமணமாகி தந்தையானவர்; ஆனாலும் இணையக் கள்ளச் சந்தை மற்றும் டெலிகிராம் குழுக்களில் CSAM எனப்படும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகக் காட்சிகளை அவர் விற்பனை செய்து வந்துள்ளார்.
அவர் குழந்தைகளை, திருமணமாகாத தாய்மார்களிடமிருந்து இணைய விளம்பரங்கள் மூலம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மென்மையான பேச்சு, கண்ணாடி அணிந்த முகம், கச்சிதமாக வெட்டப்பட்ட தாடி என்ற வசீகரமான தோற்றத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு அந்நபர் இந்த அருவருப்பான வேலையைப் பார்த்து வந்துள்ளார்.
யாரும் அவரை சந்தேகிக்கவில்லை; அதனால்தான் இந்த வழக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக போலீஸ் வட்டாரம் கூறியது.
விசாரணையில் கணவரின் செயல்கள் குறித்து தெரிய வந்த போது, அதை நம்ப முடியாமல் அவரது மனைவி வெறித்தனத்தில் உடைந்து அழுததாகவும் கூறப்படுகிறது.
இணையத்தில் சிறார் ஆபாச வீடியோக்கள் விற்கப்பட்டது தொடர்பில் போலீஸார், மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC-யுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் தற்சமயம் சமூக நல வாரியத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு, உரிய ஆலோசகச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.