
சுங்கை பட்டாணி, பிப்ரவரி 25 – வாகனத்தின் சாலைவரி காலாவதியானதைத் தொடர்ந்து, நேற்றிரவு சுங்கை பட்டாணி குவாலா கெத்தில் (Kuala Ketil) பகுதியில் போலீசாரின் பரிசோதனையின் போது, தப்பிச் செல்ல முயன்ற 22 வயது இளைஞன், போலீஸ் ரோந்து வாகனத்தையும் பொதுமக்களின் காரையும் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரண்டு போலீஸ் ரோந்து வாகன அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற ப்ரோட்டான் சாகா காரை நிறுத்த உத்தரவிட்டுள்ளனர். ஆனால், அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற ஆடவன் உத்தரவை மீறி வேகமாகச் சென்றதால், போலீசார் அந்நபரைத் துரத்தியதாக குவாலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ஹன்யான் ரம்லான் (Assistant Commissioner Hanyan Ramlan) தெரிவித்தார்.
சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு பிறகு, தாமான் ஸ்ரீ தஞ்சோங் (Taman Seri Tanjung) பகுதியில் சந்தேக ஆடவன் கட்டுப்பாட்டை இழந்து கேரேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மோதி மீண்டும் தப்பிச் செல்ல முயன்றுள்ளான்.
பின்னர் ஜாலான் சுங்கை லாயார் (Jalan Sungai Layar) பகுதியில் போலீஸ் ரோந்து வாகனத்தை மோதியதையடுத்து அவன் கைது செய்யப்பட்டான்.
விசாரணையில், காரின் சாலைவரி காலாவதியானது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



