
குளுகோர், மார்ச் 17 – இன்று பினாங்கு Gelugor சுப்ரமணிய பாரதி தமிழ்ப் பள்ளிக்கு வருகை புரிந்த கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் (Fadhlina Sidek) பிரதமரின் கூடுதல் மான்யமாக 300,000 ரிங்கிட் காசோலையை ஒப்படைத்தார்.
இப்பள்ளியின் கூடுதல் கட்டிட நிர்மாணிப்புத் திட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் இந்த தொகையை வழங்கியிருக்கின்றார்.
கல்வி அமைச்சர் இப்பள்ளிக்கு வருகை புரிவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் முறையாக
வருகை அமைந்ததாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் Utamanseelan Sathiah தெரிவித்துள்ளார்.
பள்ளியின் இணைக் கட்டிடத்தை கட்டி முடிக்க கூடுதல் நிதி பள்ளி மேலாளர் வாரியத்திற்கு தேவைப்பட்ட போதிலும் தற்போது வழங்கப்பட்ட இந்த ஒதுக்கீடான 300,000 ரிங்கிட் தங்களது நிதி நெருக்கடியை குறைக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.
இந்த உதவிக்கு பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே சமயத்தில், இப்பள்ளியின் வெற்றிக்கு கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஆசிரியர்களின் ஆக்கப்பூர்வமான பங்கும், பெற்றோர்களின் ஈடுபாடும் பெரும் பங்காற்றியுள்ளது.
இந்த ஒத்துழைப்பின் மூலம் மாணவர்களுக்கு நன்மையை கொடுக்கக்கூடிய புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவர் பள்ளியின் மேம்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான தலைமைத்துவத்தை வழங்கிவரும் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் டத்தோ சுரேஸ் அவர்களுக்கும் Utamanseelan தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.