
பத்து பஹாட், ஜூலை 4 – வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் 80.7 ஆவது கிலோமீட்டரில் நேற்று முன் தினம் இரவு இரண்டு இந்தோனேசிய தோட்டத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த விபத்தில் தொடர்புடைய சுற்றுலாப் பஸ் ஓட்டுநரை மூன்று நாள் தடுத்து வைப்பதற்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1987 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதற்காக 35 வயதான ஓட்டுநரை இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காவலில் வைக்க நீதிபதி நுரசிடா ஏ ரஹ்மான் ( Nurasidah A. Rahman ) உத்தரவு பிறப்பித்தார்.
நள்ளிரவு மணி 12.27 மணிக்கு நடந்த அந்த சம்பவத்தில், பழுதடைந்த டேங்கர் லோரி இழுத்துச் செல்லப்பட்டபோது அதன் பின்னால் சுற்றுலா பஸ் மோதியதால் இரண்டு தோட்டத் தொழிலாளர்கள் இறந்தனர், மற்றொருவர் இடது கை முறிவுக்கு உள்ளாகினார்.
இந்த விபத்தில் மேலும் 14 பேர் சொற்ப காயத்திற்கு உள்ளாகினர். Lombok க்கிலிருந்து மலேசியா வந்தடைந்த இரண்டு பெண்கள் உட்பட 45 தோட்ட தொழிலாளர்களை ஏற்றி வந்த அந்த சுற்றுலா பஸ் உலுத் திராமிலுள்ள தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அந்த விபத்து நிகழ்ந்தது.