செகாமட் நிலநடுக்கம்: பிளவு கோடுதான் காரணம் – கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 28 – செகாமட் பகுதியில் நேற்று பதிவான சிறிய அளவிலான நிலநடுக்கம், மெர்சிங் நில அடுக்கு அமைப்புடன் தொடர்புடைய பிளவு கோட்டில் மீண்டும் நகர்வு ஏற்பட்டதால்தான் நீகழ்ந்தது என JMG கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், செகாமட்டின் தெற்கே சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்தது.
சுமார் 10 கிலோமீட்டர் மட்டுமே ஆழம் கொண்ட இந்த அதிர்வு, எரிமலைச் செயல்பாடு அல்லது ஆழ்ந்த நிலச்சரிவு நடவடிக்கையால் ஏற்படவில்லையென்றும், ஜே.எம்.ஜி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசியா சுண்டா நில அடுக்கு தட்டில் (Sunda Plate) நிலையாக இருந்தாலும், சுமத்ரா தீவிலுள்ள சுண்டா துணை மண்டலத்திலிருந்து அழுத்தத்தைச் சந்தித்து வருவதால் சிறிய அளவிலான நிலநடுக்கங்களுக்கு அது வித்திடுகிறது.
முன்னதாக 2021 மற்றும் 2023-ல் பகாங்-புக்கிட் திங்கி திரெங்கானு-கென்யிர், நெகிரி செம்பிலான்-கோலா பிலா , பேராக்-மஞ்சோங்-தெமெங்கோர் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாக்கும் வகையில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சுடன் இணைந்து அறிவியல் கண்காணிப்பு மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அத்துறை தெரிவித்துள்ளது.