![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/steia-alam-780x420.webp)
ஷா ஆலாம், பிப்ரவரி-9,
சிலாங்கூர் செத்தியா ஆலாமில் உள்ள பேரங்காடியில் உள்ளூர் ஆடவன் ஒருவன் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நூற்றுக்கணக்கான பொது மக்கள் தலைத்தெறிக்க ஓடியதோடு, பலர் என்ன நடக்கிறது என தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.
8 முறை துப்பாக்கியால் சுட்டவன், அங்கிருந்த காரொன்றை வலுக்கட்டாயமாக நிறுத்தி, அதிலேறி தப்பிச் சென்றான்.
சம்பந்தப்பட்ட காரோட்டி பின்னர் அது குறித்து போலீஸில் புகார் செய்ததாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
காலில் துப்பாக்கிச் சூடு பட்ட துப்புரவுப் பணியாளரான ஓர் ஆடவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவன் ஒரு குறிக்கோளுடனேயே பேரங்காடிக்குள் நுழைந்துள்ளான்.
குறி வைத்த நபரை சுட்டவுடன் அவன் தப்பியோடியுள்ளான்.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, சந்தேக நபர் தீவிரமாகத் தேடப்படுகிறான்.
சொந்த கார் இல்லாததால், அவன் வெகு தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை;
எனவே வெளியில் சந்தேகத்திற்குரிய வகையில் ஆடவர் யாரையாவது கண்டால் உடனடியாகப் போலீஸுக்குத் தகவல் கொடுக்குமாறு பொது மக்களை டத்தோ ஹுசேய்ன் கேட்டுக் கொண்டார்.