
சென்னை, மார்ச்-21 – மலேசியாவைச் சேர்ந்த தனது நண்பர் நவீன்ராஜ் என்பவரை, சென்னைக் குடிநுழைவு அலுவலக அதிகாரிகள் தாக்கியதாக, பிரபல ராப் இசைப் பாடகர் அசல் கோலார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சுற்றுலா விசாவில் சென்னை வந்த நவீன்ராஜ் விசா முடிந்தும் சென்னையில் இருந்துள்ளார்.
சுற்றுலா விசா காலாவதியாகும் போது அதனை நீட்டிக்கவும் முயன்றுள்ளார்; ஆனால், சுற்றுலா விசாவை நீட்டிக்க முடியாது என்று அப்போது தான் தெரிய வந்தது என கோலார் கூறிக் கொண்டார்.
ஆனால், விசாரிக்கச் சென்ற அதிகாரிகள் அவரை தாக்கியதோடு, போதைப்பொருள் வைத்திருக்கிறாயா என்றும் கீழ்த்தரமாகக் கேட்டுள்ளனர்.
கைப்பேசியைப் பறித்துக்கொண்டதோடு பயணப் பத்திரங்களின் அசல் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டதாக கோலார் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வெளிநாட்டிலிருந்து வந்த சுற்றுப்பயணியை இப்படித் தான் நடத்துவீர்களா என்றும் செய்தியாளர் சந்திப்பில் அசல் கோலார் காட்டமாகக் கேட்டது வைரலாகியுள்ளது.
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அக்குற்றச்சாட்டு குறித்து இன்னும் கருத்துரைக்கவில்லை.