
செராஸில் விபத்திற்குப் பின் முதியவரை தாக்கிய வர்த்தகருக்கு வெறும் அபராதமா? குடும்பத்தார் அதிருப்தி
கோலாலம்பூர், பிப்ரவரி-12,
ஞாயிற்றுக்கிழமை செராஸில் நடந்த சாலை விபத்திற்குப் பின் தாக்கப்பட்ட ஒரு முதியவரின் குடும்பத்தினர், தாக்குதல் நடத்திய வாகன ஓட்டுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய 52 வயதான வர்த்தகர் சைபுல் அட்லி யூசோப், ஒரு சிறிய சாலை விபத்தைத் தொடர்ந்து லியூ கூன் பூ ( Liew Khoon Foo ) என்ற 70 வயது முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு 5,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. லியு உதைக்கப்பட்டு அறையப்பட்டதால் அவரது கண் வீங்கியதோடு நாக்கில் ஆறு தையல்கள் போட வேண்டியிருந்தது.
சைபுலுக்கு குறைந்த தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதால் லியூவின் குடும்பத்தினர் வருத்தமடைந்ததாகவும், வழக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சட்ட உதவியை நாடுவதாகவும் அவரது மகள் சிண்டி கூறினார். தனது தந்தை சுயநினைவில் இருந்தாலும் அவர் இன்னமும் அதிர்ச்சியல் இருப்பதோடு அது அவரை பாதித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அபராதம் மிகவும் சாதாரணமானது என்று தாம் உணர்வதாகவும் மற்றொரு வாகன ஓட்டுநர் இதே கதியை அனுபவிப்பதை தாம் பார்க்க விரும்பவில்லை என்றும் சிண்டி தெரிவித்தார். மேலும் விபத்தில் தனது தந்தை தவறு செய்திருந்தாலும், அவரை பழிவாங்க யாருக்கும் உரிமை இல்லை. அவர் அடித்துக் கொல்லப்பட்டிருந்தால் என்ன செய்வது? அப்போது யார் பொறுப்பு ஏற்பார்கள் என்றும் சிண்டி கேள்வி எழுப்பினார்.



