
தாவாவ், மார்ச் 18 – சோறு வேகவில்லை என்பதற்காக தன்னை திட்டிய சக உணவக ஊழியரை ஆத்திரமடைந்த நபர் மீன் வெட்டும் கத்தியால் வெட்டிய சம்பவம் தாவாவிலுள்ள உணவகம் ஒன்றில் நடந்துள்ளது.
Kubota Sentral லில் உள்ள உணவகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை மணி 5.40 அளவில் நடந்த அந்த சம்பவத்தில் இடது கையில் ஏற்பட்ட கத்திக் குத்து காயத்தினால் உடனடியாக தாவாவ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட உணவக ஊழியருக்கு 10 தையல்கள் போடப்பட்டது.
உணவகத்தின் இரண்டு ஊழியர்களும் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறின் விளைவாக இச்சம்பவம் நடந்ததாக தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஜஸ்மின் உசேய்ன் தெரிவித்தார்.
காயத்திற்குள்ளான அந்த ஊழியர் அன்றைய தினம் இரவு மணி 9.31 அளவில் போலீசில் புகார் செய்ததால் தாக்குதல் நடத்திய 21 வயது ஊழியர் நேற்றிரவு கைது செய்யப்பட்டான்.
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 33 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் 324 ஆவது விதியின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜஸ்மின் தெரிவித்தார்.



