
தோக்யோ – ஆக 1 – ஜப்பானில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்திற்கு வெளியே கரடி தாக்கியதில் ஒரு பெண் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். அண்மைய ஆண்டுகளில் ஜப்பானில் குடியிருப்பு பகுதிகளில் காடுகளில் வசிக்கும் கரடிகள் அதிகமாகக் காணப்படுவதால் தாக்குதல்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்றிரவு அந்த இல்லத்தின் நுழைவாயிலில் 73 வயதுடைய ஒரு பெண் தலையில் காயங்களுடன் படுத்துக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக வடகிழக்கு அகிதா (AKita ) வட்டாரத்தில் உள்ளூர் போலீஸ் பேச்சாளர் AFP யிடம் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்களின் அடிப்படையில், இது கரடி தாக்குதல் என்று நம்புவதாக அவசரநிலை மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். குப்பைப் பை போன்ற ஒன்றை எடுத்துக்கொண்டு நடந்து சென்றபோது, கரடியைப்போல ஒரு விலங்கு அந்தப் பெண்ணைத் தாக்குவதை அந்த இல்லத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு கேமரா காட்சிகள் காட்டுகின்றன. காயங்கள் காரணமாக அப்பெண்ணால் பேச முடியவில்லை என்பதோடு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது மயக்கமடைந்தார். கடந்த ஆண்டு கரடிகள் 85 பேரைத் தாக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர். ஜூன் மாதத்தில், விமான நிலையத்தின் ஓடுபாதையில் சுற்றித் திரிந்த ஒரு கரடியினால் யமகட்டா ( Yamagata ) விமான நிலையத்தில் விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன.