கோலாலம்பூர், அக்டோபர் -5 – தலைநகர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் கனமழையின் போது சாக்கடைக் குழியின் சிமெண்ட் மூடி தானாகவே திறப்பதும் மூடுவதுமாக இருப்பதைக் காட்டும் வீடியோ வைரலாகி, வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலம் உள்வாங்கி இந்தியப் பிரஜை காணாமல் போன இடத்தருகே அச்சம்பவம் நிகழ்ந்திருப்பதால், பாதுகாப்புக் குறித்த கவலை மீண்டும் தொற்றிக் கொண்டுள்ளது.
மூடிய பானை கொதிக்கும் போது, அதன் மூடி மேலே எழும்புவதும் இறங்குவதும் போலவே, வைரலான வீடியோவில் சிமெண்ட் மூடியும் அசைகிறது.
20 வினாடி அவ்வீடியோவைப் பதிவேற்றியவர், அப்பகுதியில் நடக்கும் போது பார்த்து கவனமாகச் செல்லும்படி பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
அந்த சிமெண்ட் மூடி அவ்வாறு மேலே எழும்புவதும் இறங்குவதுமாக இருந்ததற்கு, நிலத்தடியில் நிலவும் அளவுக்கதிகமான அழுத்தமே காரணம் என நம்பப்படுகிறது.
எனினும், அது குறித்து அதிகாரத் தரப்பிடமிருந்து இதுவரை விளக்கமோ அறிக்கையையோ வெளியாகவில்லை.