Latestமலேசியா

ஜோகூரில் நோன்பு மாதத்தில் உணவருந்திய சீன ஆடவரை அறைந்த வயதான நபர்; அமைச்சர் கண்டனம்

புத்ரா ஜெயா, மார்ச் 17 – ஜொகூரில் நோன்பு மாதத்தில் உணவு அருந்தியதற்காக ஒரு சீனரை வயதான ஆடவர் ஒருவர் பலமுறை அறைந்த சம்பவம் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை பிரதிபலிக்காத ஆத்திரமூட்டும் செயலாகும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ருக்கூன் நெகாரா (Rukun Negara) பண்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் நாட்டில் இத்தகைய சம்பவங்கள் வளர்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் ( Datuk Aaron Ago Dagang) வலியுறுத்தினார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு வன்முறை, பாகுபாடு மற்றும் தவறான எண்ணத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக X தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை தொடர்பான விவகாரங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், அது மக்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அளவிற்கு விட்டுவிடக் கூடாது என்றும் அவர் விளக்கினார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 323ன் கீழ் இந்த வழக்கை போலீஸ் விசாரிக்கும் என்று தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால்
எல்லா தரப்பினரும் போலீசிற்கு முழுமையாக ஒத்துழைப்பார்கள் என நம்புவதாக ஆரோன் அகோ டகாங் ( Datuk Aaron Ago Dagang) மேலும் கூறினார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட எலிஜா ( Elijah ) என்பவர் தம்போய் (Tampoi) போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!