
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-18 – ஜோகூர் பாருவில் உள்ள சமயப் பள்ளியொன்றில் கடுமையான பகடிவதைக்கு ஆளான 10 வயது சிறுவன், மூளை அதிர்வால் தற்போது அவதிப்படுகிறான்.
ஏற்கனவே அவன் மூக்குப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவன் என அவனது 39 வயது தாய் Siti Suhana Misdi வேதனையுடன் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், ஆறாம் வகுப்பு மாணவனான சந்தேக நபர், தன் மகனை அடித்து, எட்டி உதைத்து, தலையைப் பிடித்து தரையில் இடித்தோடு, நிர்வாணமாக்கியதாக, தாய் கூறினார்.
காயங்களுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான், மகனின் மூளையில் அதிர்வு ஏற்பட்டது உறுதிச் செய்யப்பட்டது.
அப்போதே Taman Universiti போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
ஆனால், ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஸ்கூடாயில் உள்ள ஒரு தேசியப் பள்ளியில் மகன் மீண்டும் பகடிவதைக்கு ஆளானதால் தாய் கொதித்துப் போனார்.
மகன் ஒரு நோயாளி என்பதால், அவன் பலவீனமானவன் என நினைத்து அனைவரும் அவனைக் குறி வைக்கிறார்களா எனத் தெரியவில்லை என, Siti Suhana விரக்தியுடன் கேட்டார்.
ஈராண்டுகளாக மூக்குப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சைகளுக்குப் பிறகு இப்போது தான் 80 விழுக்காடு அவன் தேறியுள்ளான்.
இந்த நிலையில், அவனை பகடிவதைக்கு ஆளாக்கி கொடுமைப்படுத்துவதை எந்தத் தாயால் சகித்துக் கொள்ள முடியும் என Siti Suhana கேட்டார்.
“என் மகன் மருத்துவனையும் வீடுமாக இருக்கிறான்; ஆனால் அவனது இந்நிலைக்குக் காரணமானவர்களோ வயதுக் குறைந்தவர்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் வெளியில் சுதந்திரமாக சுற்றுகின்றனர்” என தாய் வேதனையுடன் சொன்னார்.
இவ்வேளையில் அச்சம்பவம் குறித்து மாநிலக் கல்வி இலாக உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.