
ஜோகூர் பாரு, மே-23-ஜோஹூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசியின் (Onn Hafiz Gazi) தனிப்பட்ட கைப்பேசி, அதிநவீன ‘பெகாசஸ்’ (Pegasus) இரக உளவு மென்பொருள் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் மூலம் அவரது கைப்பேசித் தரவுகள், உரையாடல்கள் மற்றும் இரகசியத் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Apple நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கைச் செய்தி கிடைத்தப் பிறகே அத்தாக்குதல் குறித்து தாம் உணர்ந்ததாக ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட ஓன் ஹாஃபிஸ், இதனைக் கடுமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
இந்தத் தனியுரிமை மீறல் குறித்து போலீஸிலும், தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC-யிடமும் புகாரளிக்கப்படும்.
எனவே, பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அனைத்து 56 சட்டமன்றத் தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடும் என அறிவித்து ஓன் ஹாஃபிஸ் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரின் கைப்பேசி உளவுப் பார்க்கப்பட்டதாக புகார் கிளம்பியுள்ளது.



