
கோலாலம்பூர், அக் -6,
நாட்டில் ஊடகத்துறையில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் அவர்களின் ” நூற்றாண்டு நினைவலைகள்” நூல் நேற்று கோலாலம்பூர் செந்தூல் செட்டியார்கள் மண்டபத்தில் சிறப்பாக வெளியீடு கண்டது.
இந்தியாவில் பொன்னி இதழ் ஆசிரியராகவும் பின்னர் சிங்கப்பூரில் தமிழ் முரசு மற்றும் மலேசியாவில் தமிழ் நேசன் ஆசிரியராகவும் பணியாற்றி இந்திய சமுகம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமுக விவகாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த தனது எழுத்துக்களை முக்கிய கருவியாக பயன்படுத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்திய முருகு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்சியை ம.இ.கா துணை தலைவரான டத்தோ ஶ்ரீ சரவணன் தலைமையிலான கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாடு செய்தது.
இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தமிழ் நேசனில் ஆக்கப்பூர்வமான தலையங்கத்தை எழுதி பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதற்கு தூண்டுகோலாக முருகு திகழ்ந்தார் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் புகழாரம் சூட்டினார்.
சமயம், தமிழ்க் கல்வி, தமிழ்ப் பள்ளிகள் , அரசியல், தோட்ட தொழிலாளர்கள் , இந்தியர்களின் ஏழ்மை நிலை போன்ற விவகாரங்களை துணிச்சலாக சுட்டிக் காட்டும் வகையில் முருகுவின் தலையங்கம் இருந்ததை மறுக்க முடியாது.
அதுமட்டுமின்றி அவரைப் பற்றிய ஆவணங்கள் உட்பட இந்திய சமூகம் தொடர்பான வரலாற்று பதிவகத்தை ஆவணப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படும் என சரவணன் குறிப்பிட்டார்.
இதனிடையே முத்தமிழ் வித்தகர் முருகு புதிய சமுதாயம் மாத இதழை நடத்தியபோது அதில் தாம் துணையாசிரியராக பணியாற்றிய காலத்தில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தோடு, இப்போது அவரது நூற்றாண்டு நினைவலைகள் நூலை தொகுப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து இரா . முத்தரசன் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் முரசு நெடுமாறன், எழுத்தாளர் பெரு.அ.தமிழ்மணி, ம.இகாவின் மூத்த தலைவரான டான் ஸ்ரீ குமரன் அவர்களும் கலந்துக் கொண்டனர்.
இந்தியாவில் பொன்னி மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உட்பட பல கவிஞர்களிடம் நெருங்கிப் பழகியதோடு அவர்களது கவிதைகளை வெளியிடுவதிலும் முருகு அக்கரை காட்டினார்.
சீர்திருத்த சிந்தனைகள், சமுக மறுமலர்ச்சி போன்ற சிந்ததாந்தங்கள் கொண்டிருந்த முருகு நேசன் ஆசிரியராக இருந்தபோது இந்நாட்டில் அதிகமான எழுத்தாளர்களும் மற்றும் கவிஞர்கள் உருவாகுவதற்கும் பெரும் ஆதரவாகவும் மூல காரணமாகவும் இருந்ததாக முரசு நெடுமாறன் வருணித்தார்.
முருகுவின் குடும்ப உறுப்பினர்கள், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என பலர் திரளாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு சிறப்பு பிரமுகர்களுக்கு டத்தோஸ்ரீ சரவணன் முருகுவின் நுற்றாண்டு நினைவலைகள் நூலை இலவசமாக வழங்கினார்.
அதோடு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இந்த நூல் வழங்கப்பட்டது.