
ஜாசின், ஏப்ரல்-10-மலாக்கா, ஜாசினில் டிரேய்லர் கவிழ்ந்த போது உயிர் தப்பிய அதன் ஓட்டுநர், வாகனத்திலிருந்து வெளியேறி சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த லாரி மோதி உயிரிழந்தார்.
தெற்கு நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையின் 178.8-ஆவது கிலோ மீட்டரில் நேற்று மதியம் 1 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்தது.
பயன்படுத்தப்பட்ட வாகனங்களை Volvo டிரேய்லரில் ஏற்றிக் கொண்டு, ஜோகூர், மூவாரிலிருந்து கிள்ளான் துறைமுகத்தை நோக்கி 58 வயது அந்த ஓட்டுநர் வந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில், சம்பவ இடத்தை நெருங்கியதும் டிரேய்லர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக விலகி மரத்தை மோதி கால்வாயில் கவிழ்ந்தது.
வாகனத்திலிருந்து வெளியேறிய ஓட்டுநர், சாலையைக் கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்த Nissan CD4 லாரி அவரை மோதித் தள்ளியது.
அதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு, தலையிலும் உடம்பிலும் படுகாயமடைந்தவர், சிகிச்சைக்காக தங்காக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
எனினும் சிகிச்சைப் பலனளிக்காததால் நேற்றிரவு அவர் மரணமடைந்தார்.
விபத்து குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.



