
கோலாலம்பூர், மார்ச்-9-டிக் டோக்கில் 1 மில்லியன் பின்தொடர்பாளர்களை கடந்து, நாட்டின் மிகச் செல்வாக்குமிக்க தமிழ்ச் செய்தி ஊடகத் தளம் என்ற அந்தஸ்தை வணக்கம் மலேசியா மேலும் வலுப்படுத்தியுள்ளது.
சில தேசிய நீரோட்ட செய்தி நிறுவனங்கள், துணைக்கோள தொலைக்காட்சி நிலையங்கள் உள்ளிட்டவற்றை மிஞ்சிய இச்சாதனை, உள்ளூர் மின்னியல் ஊடகப் பயணத்தில் இந்நிறுவனத்தின் இன்னொரு மைல்கல்லாகும்.
இதன் மூலம், அனைத்து சமூக ஊடகத் தளங்களையும் சேர்த்து மொத்தமாக 1.64 மில்லியன் பின்தொடர்பாளர்களை வணக்கம் மலேசியா கொண்டுள்ளது.
தவிர, மாதத்திற்கு 100 மில்லியன் பார்வைகள் எனும் சாதனையுடன், மலேசியாவின் 2 மில்லியன் இந்தியச் சமூகத்திலும், உலகத் தமிழ் பரவலிலும் வணக்கம் மலேசியா வலுவான செல்வாக்கை பெற்றுள்ளது.
22 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பான, சமூகத்தை மையமாகக் கொண்ட ஊடகச் செயல்பாட்டில் ஈடுபட்டு வரும் வணக்கம் மலேசியா , கல்வி, தொழில் முனைவோர் வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் செய்திகளையும் கதைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இந்த பெருமைமிக்கு அடைவுநிலை குறித்து மகிழ்ச்சித் தெரிவித்த வணக்கம் மலேசியாவின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான தியாகராஜன் முத்துசாமி, “இந்த சாதனை எங்களின் ஒவ்வொரு பார்வையாளர்களின் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் சொந்தமானது என்றும் நேயர்களின் தொடர் ஊக்கத்திற்கான சான்று என்றும் ” என நன்றியைப் புலப்படுத்தினார்.
வணக்கம் மலேசியாவின் செல்வாக்கு எல்லை கடந்து, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து வரை விரிவடைந்ததாகும்.
இதன் மூலம் உலகத் தமிழ் சமூகத்துடன் மலேசியாவை இணைக்கும் முக்கிய டிஜிட்டல் பாலமாக வணக்கம் மலேசியா தொடர்ந்து வளர்ந்து, உலகத் தமிழ் தகவல்-பொழுதுபோக்கு மையமாக மாறும் தனது கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
நேயர்களின் வற்றாத ஆதரவுக்கு மீண்டுமொருமுறை எங்களின் நன்றி…



