
ஜெலபு, ஜூலை-18- நெகிரி செம்பிலான், ஜெலபுவில் தனது டுரியான் பழத்தோட்டத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த முதியவரின் பக்கத்தில், சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட சுடும் ஆயுதம் கண்டெடுக்கப்பட்டது.
குவாலா கிளாவாங்கில் புதன்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்தது. 67 வயது அவ்வாடவர், கட்டையால் செய்யப்பட்ட துப்பாக்கியால் தன்னைத் தானே தவறுதலாக சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது.
தோட்டத்துக்குப் போவதாகக் கூறி காலையில் வீட்டை விட்டுக் கிளம்பியவர் மாலை வரை வீடு திரும்பவில்லை.இதையடுத்து குடும்பத்தார் போலீஸில் புகார் செய்தனர்;
உடனடியாக டுரியான் தோட்டத்துக்கு விரைந்த போலீஸார், முதியவரின் சடலத்தை மீட்டு சவப்பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அச்சம்பவம் தற்போதைக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டாலும் விசாரணைத் தொடருவதாக ஜெலபு போலீஸ் கூறியது.