
செந்தோசா, டிசம்பர்-18 – இந்தியச் சமூகத்தின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து,
தமிழ் பேசக்கூடிய முழு அமைச்சரை நியமித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் நன்றித் தெரிவித்துள்ளார்.
அதுவும் துணையமைச்சராக துடிப்புடன் செயலாற்றிய டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு முக்கியப் பொறுப்புகளில் ஒன்றான மனிதவளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம், மலேசிய இந்தியச் சமூகத்தின் குரலும், பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதற்கான முக்கிய அடையாளமாகும்.
புதிய அமைச்சரவை மாற்றத்தில், இளம் தலைவர்களில் ஒருவரான யுனேஸ்வரன் துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்கள், இவர்களின் திறமை, நேர்மை மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பில் பிரதமர் வைத்துள்ள முழு நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றார் அவர்.
சீர்திருத்தங்கள், அரவணைத்துச் செல்லும் வளர்ச்சி, மக்கள் நலன் ஆகியவற்றை முன்னெடுக்க இவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் எனவும் குணராஜ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இவ்விருவருக்கும் வாழ்த்து பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாகவும் குணராஜ் குறிப்பிட்டார்.
இனி, இந்தியச் சமூகம் ஒன்றுபட்டு, மடானி அரசுடன் இணைந்து செயல்பட்டு, சமூக தேவைகளை அமைதியான, பொறுப்பான முறையில் முன்வைத்து,
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் எனவும் குணராஜ் அழைப்பு விடுத்தார்.
சிலாங்கூர், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், இரண்டே ஆண்டுகளில் துணையமைச்சரிலிருந்து முழு அமைச்சராக பதவி உயர்வுப் பெற்றுள்ளார்.
அதே சமயம் ஜோகூர் செகாமாட் எம்.பியான யுனேஸ்வரன் செனட்டர் சரஸ்வதி கந்தசாமிக்கு பதிலாக ஒருமைப்பாட்டு துணையமைச்சராகியுள்ளார்.
இருவரும் நேற்று மாமன்னர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.



