
கோலாலம்பூர், ஜனவரி-31, நாட்டில் தமிழ் ராப் இசைப் பாடகர்களைப் பார்த்திருக்கிறோம்; தமிழும் ஆங்கிலமும் கலந்து ராப் செய்யும் பாடகர்களையும் கண்டுள்ளோம்.
அவர்களில் சற்று தனித்து தமிழிலும் மாண்டரின் மொழியிலும் ராப் செய்து அசத்தி வருகிறார் சுங்கை பூலோவைச் சேர்ந்த 35 வயது பொன்முகிலன் சேகரன்.
ஆனால், இவர் பரீட்சையமானது என்னவோ “Wo Shi Jay” அதாவது “நான் ஜெய்” என்ற பெயரால் தான்.
ஜெய் என்பது வீட்டில் அழைக்கும் பெயர்; அதனுன் மாண்டரினையும் சேர்த்து அவர் ரீமிக்ஸ் செய்து விட்டார்.
இன்று அதுவே உள்ளூர் ராப் இசை உலகில் அவரை அடையாளம் காட்டும் பெயராக நிலைத்து விட்டது.
ஹோட்டல் நிர்வாகத் துறையில் டிப்ளோமா பெற்றவரான ஜெய், சிறு வயதிலிருந்தே சீன மொழியைக் கற்று வந்துள்ளார்.
மாண்டரின் பாலர் வகுப்பிலும் பின்னர் ஆரம்பப் பள்ளியிலும் கற்றவர், இடைநிலைப் பள்ளியிலும் மாண்டரின் வகுப்பைத் தொடர்ந்துள்ளார்.
மாண்டரின் மொழியாற்றல், உள்ளூர் ராப் உலகின் அவர் காலூன்ற பெரிதும் துணையாக இருந்துள்ளது.
கடந்தாண்டு பாடகி ஜாஸ்மினுடன் இணைந்து ‘You Dunno Meh?” என்ற சீனப் புத்தாண்டு பாடல் வைரலானது.
தமிழ் வரிகளிலும் மாண்டரினில் ராப்பும் அவர் செய்த ‘அட்டகாசம்’ நேயர்களைப் பெரிதும் கவர்ந்தது.
அதை தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறிய ஜெய், திடீரென உலகம் முழுவதும் தனது இரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகச் சொன்னார்.
15 வயதில் பள்ளியில் மலாய் கவிதை ஒப்புவிக்கும் போது, தனக்கு முதன் முதலான அந்த ராப் யோசனைத் தோன்றியதாகக் கூறும் ஜெய், உள்ளூர் ராப் இசை ஜாம்பவான்களான யோகி பி, Dr பர்ன், ஸ்டைலோ மன்னவன் போன்றவர்களை முன்மாதிரியாகக் கொண்டுள்ளார்.
இறுதியில் தனது சகோதரர் மற்றும் உறவினருடன் சேர்ந்து ஆதித்தியான்ஸ் என்ற குழுவை உருவாக்கி, ஸ்டைலோமன்னவனின் வழிகாட்டுதலின் கீழ் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார்.
சீனப் பள்ளியில் சேர்த்து தன் ஆசையை நிறைவேற்றிய தந்தையே தனது ஹீரோ என, FMT-யிடம் கூறினார் இந்த ‘கறுப்பு சீன பையன்’.