
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8 – நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கு இந்த மடானி அரசாங்கத்தின் கீழ் விடிவுகாலம் பிறக்க வேண்டுமென, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, நீண்ட காலம் கிடப்பில் உள்ள பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி, விரைவிலேயே கட்டி முடிக்கப்பட வேண்டும்.
அதே சமயம்,
பஹாங், ஜெராம் தோட்டத் தமிழ்ப் பள்ளி, கெடா, கெத்தும்பார் தோட்டத் தமிழ்ப் பள்ளி போன்றவற்றின் பிரச்னைகளும், 13-ஆவது மலேசியத் திட்ட காலத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இவ்வேளையில், TVET எனப்படும் தொழில் கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வரும் அரசாங்கம், இந்திய பாரம்பரிய வாத்திய இசைக் கலைஞர்களையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேளம், தவில், நாதஸ்வரக் கலைஞர்களை உள்ளூரிலேயே உருவாக்க இது வழி வகுக்கும்.
அதோடு, முறையான பயிற்சிகளுடன் அர்ச்சகர்களையும் இங்கேயே உருவாக்கலாம்.
இதன் மூலம் இத்துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை அதிகம் சார்ந்திருப்பதை மலேசியாவால் குறைக்க முடியுமென ராயர் சொன்னார்.
மக்களவையில் 13-ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய போது அவர் அப்பரிந்துரைகளை முன்வைத்தார்.