
பட்டவொர்த், அக்டோபர்-12, பினாங்கு, சுங்கை ஜாவி, கம்போங் வால்டோரில் போலி மதுபானங்கள் தயாரிக்கும் கும்பல், அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்பிக்க தவளைக் கத்தும் சத்தத்தை குறியீட்டு சமிக்ஞையாகப் (code sound) பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், ஆகக் கடைசி சோதனையில் அவர்களின் ஜம்பம் பலிக்கவில்லை.
ஒதுக்குப்புறமாக இருந்த அக்கும்பலின் மறைவிடத்தை ஒருவழியாக முற்றுகையிட்ட சுங்கத் துறை, 4 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பைக் கொண்ட போலி மதுபானங்களைப் பறிமுதல் செய்தது.
ஆள் நடமாட்டம் இல்லாத அப்பகுதிக்கு அருகிலிருக்கும் தவளை வளர்ப்புக் குளம், அக்கும்பலுக்கு வசதியாகப் போய் விட்டது.
யாராவது நடந்து சென்றால் தவளைகள் பெரும் சத்தத்தை எழுப்பி விடுகின்றன; போலீசைத் தவிர வேறு யார் அங்கு வரப்போகிறார்கள் என கண்டுகொண்டு அக்கும்பல் தப்பி விடுவதை வழக்கமாக வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
மொத்தமாக 6,621 பாட்டில்கள் அல்லது 2,104 லிட்டருக்கு சமமான liquor மதுபானங்கள், காலி பாட்டில்கள், பாட்டில் மூடிகள், பல்வேறு மதுபான முத்திரை ஸ்டிக்கர்கள், சுங்க வரியின் போலி முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த போலி மதுபானங்களில் சில, சந்தைக்குள் புகுந்திருப்பதாக சுங்கத் துறை சந்தேகிப்பதால், பொது மக்கள் சற்று கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.